Monday, August 24, 2009

இப்படியும் ஒரு சந்திப்பு...

இரண்டு பாஸ்போட் சைஸ் ஃபோட்டோவை பாக்கெட்டில் வைக்கும்போதே கனகராஜை சந்திக்கும் போது அவனுடன் ஒரு ஃபோட்டோ எடுத்துக்கொள்ள வேண்டுமென்று நினைத்துக் கொண்டான் கிருஷ்ணன். கனகராஜை மதியம் இரண்டு மணிக்கு மேல் சென்னை சென்ட்ரலில் சந்திப்பதாகச் சொல்லி இருந்தான். அதற்குள் நண்பனின் குடும்பத் திருமணத்திற்குச் சென்று, அங்கிருந்து தேர்வு எழுதுவதற்கான விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து இரண்டு ஃபோட்டோக்களை ஒட்டிக் கொடுக்க வேண்டியிருந்தது அவனுக்கு. மதியம் வரை வகுப்பு வேறு இருக்கிறது. அவன் வகுப்பிலிருந்து சீக்கிரமே புறப்பட்டுவிட வேண்டுமென்று நினைத்துக் கொண்டான். இல்லையெனில் கனகராஜைப் பார்க்க முடியாது.

விநாயகர் சதுர்த்தி மட்டுமல்லாது ஞாயிற்றுக்கிழமை என்பதால் ஊரே கோலாகலமாக இருந்தது. கனகராஜை கிருஷ்ணனுக்கு முன்பின் தெரியாது. அவர்களுக்கிடையிலான ஒரு வாரகால இ-மெயில் தொடர்பு மட்டுமே சந்திப்பிற்கான காரணமாக இருந்தது.

அவர்களுக்கு இடையிலான இ-மெயில் பரிமாற்றம் சுவாரஸ்யம் நிறைந்தது. முதலில் கனகராஜ் தான் கிருஷ்ணனுக்கு இ-மெயில் அனுப்பி இருந்தான்.

அன்புள்ள கிருஷ்ணபிரபு சார்,

நான் கனகராஜ், ஈரோட்டில் உள்ள தனியார் கல்லூரியில் BCA இறுதியாண்டு படித்துக்கொண்டு இருக்கிறேன். நான் இணையத்தில் கோவில்களைத் தேடும்போது உங்களுடைய "இந்திய நேபாள சுற்றுலா" பதிவினைக் கண்டேன். சுவாரஸ்யமாக இருக்கிறது. நான் 23/08/2009 அன்று சென்னைக்கு வருகிறேன். உங்களைப் பார்க்க முடியுமா?

உங்களுடைய முடிவை எனக்குத் தெரியப்படுத்துங்கள்.

R. கனகராஜ் (RK) ஈரோடு
18-08-2009

வந்திருந்த இ-மெயிலைப் பார்த்தவுடன் கிருஷ்ணனுக்கு ஒன்றும் புரியவில்லை. அவனுடைய மருமகன் வினோத்திற்கு ஃபோன் செய்து நடந்ததைக் கூறினான்.

என்ன மாமா? சின்ன பையன் ஆசைபடுறான். ஓய்வாயிருந்தா போய்ப்பாருங்க என்று அவனால் முடிந்த வரை சொல்லிப்பார்த்தான்.

"இல்லடா..வந்து...சரியா வருமாடா வினோத்?" - என்று கிருஷ்ணன் முனகினான்.

எல்லாம் ஒரு அனுபவம் தானே. சும்மா போயிட்டு வாங்க மாமா. வந்து அனுபவத்தை சொல்லுங்க மாமா.

வினோத்துடன் பேசிவிட்டுத்தான் கனகராஜின் இ-மெயிலுக்கு கிருஷ்ணன் பதிலளித்தான்.

அன்புள்ள கனக்கு,

நலம் தானே நண்பரே? உங்களுடைய மின்னஞ்சல் எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. மேலும் உங்களுடைய சென்னை வருகையில் நான் உங்களைச் சந்திக்கிறேன். 23/08/2009 - அன்று காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை எனக்கு வகுப்பு இருப்பதால் மதியமாக சந்திக்கத் தயார்.

நீங்கள் பேருந்தில் வருகிறீர்களா அல்லது ரயில் வண்டியில் வருகிறீர்களா?

உங்களுடைய பயண நோக்கம் என்ன? ஏதாவது நேர்முகம் அல்லது இதர முக்கியமான விஷயம் என்றால் தயவு செய்து அதில் கவனம் செலுத்துங்கள். நான் ஒரு சாதாரண சக மனிதன். ஆயிரமாயிரம் பேர் பதிவிடுகிறார்கள் அவர்களில் நானும் ஒருவன். அவ்வளவே.

மேலும் என்னை சந்திக்கும் ஆர்வம் எதனால் வந்தது? ஆன்மிகம் தான் காரணம் என்றால் அதை விளக்கும் தகுதி எனக்கு இல்லை. ஆகவே பெரிதாக எதையும் எதிர்பார்க்க வேண்டாம்.

மதியம் 2 மணி முதல் 3 மணி வரை உங்களுடன் கதைக்க வந்தால் சரியாக இருக்குமா?

எனக்கு உங்களுடைய புகைப்படம் அனுப்பிவிடுங்கள் உங்களை சந்திக்கும் பொழுது கண்டுபிடிக்க வசதியாக இருக்கும். இல்லையெனில் அந்தக் கலர் ஷர்ட்...இந்தக் கலர் ஃபேண்ட் என ஒரே குழப்பமாகிவிடும்.

உங்களுடைய பயண நோக்கம் பாதிக்காமல் பார்த்துக் கொள்ளுங்கள்.

நன்றி...

கிருஷ்ணப்பிரப்பு,
சென்னை,
18-08-2009

இந்த இ-மெயிலைப் பார்த்து ஞாயமாக அவன் ஓடி இருக்க வேண்டும். ஆனால் பதில் எழுதி இருந்தான்.

அன்புள்ள கிருஷ்ண பிரபு சார்,

உங்களுடைய பதிலுக்கு நன்றி. தயவு செய்து என்னை 'கனக்கு' என்று அழைக்காதீர்கள். என்னுடைய பாட்டிதான் அப்படி அழைப்பார்கள். முழுப் பெயரையும் பயன்படுத்துங்கள்.

இந்த இ-மெயிலுடன் எனது புகைப் படத்தையும் இணைத்துள்ளேன். நண்பருடைய திருமணத்திற்காக சென்னை வருகிறேன். ஆகவே இதர வேலைகள் எனக்கு இல்லை. 23-08-2009 மதியம் 3.15 மணிக்கு என்னுடைய ரயிலை சென்னை சென்ட்ரலில் நான் பிடிக்க வேண்டும். அதற்கு முன் உங்களை சந்தித்தால் நன்றாக இருக்கும்.

R. கனகராஜ் (RK)
ஈரோடு
19-08-2009

இந்த இ-மெயிலைப் பார்த்தவுடன் கண்கள் இருண்டது கிருஷ்ணனுக்கு. கல்லூரி வாழ்க்கையில் கணக்குப் பரீட்சையில் முட்டை வாங்கி இருக்கிறான். ஆனால் இப்பொழுது 'கனக்கு' என்ற வார்த்தையை எழுதியே முட்டை வாங்கியது போன்ற உணர்வு ஏற்பட்டது அவனுக்கு. அதற்குப் பிறகும் இரண்டு மெயில்களை பரிமாறிக் கொண்டார்கள் இருவரும்.

அதில் "கட்டற்ற மென்பொருள்" என்ற புத்தகம் உங்களுக்குப் பயன்படுமெனில் வாங்கித் தரட்டுமா என்று கனகராஜிடம் கேட்டிருந்தான் கிருஷ்ணன். அந்த புத்தகத்தை எழுதியவரின் திருமணத்திற்குத்தான் நான் சென்னை வரப்போகிறேன் சார். அவருடன் ஒருமாத காலம் நான் சென்னையில் இருந்து உபுண்டு மொழிபெயர்ப்பில் உதவி செய்திருக்கிறேன் என்ற பதில் கிருஷ்ணனுக்கு வந்திருந்தது. சதுரங்க ஆட்டத்தில் யாணை, குதிரை, மந்திரி என பலரும் படைதிரட்டிக்கொண்டு வந்து ராஜாவிற்குச் செக் வைப்பது போல கனகராஜும் ஏதோ ஒரு விளையாட்டை கண்ணுக்குத் தெரியாமல் விளையாடுவதுபோல் இருந்தது கிருஷ்ணனுக்கு. எனினும் அவன் அனுப்பிய கடைசி மெயிலில் கனகராஜை சந்திப்பதை உறுதி செய்திருந்தான்.

அதன்படி, அனைத்து வேலைகளையும் முடித்துவிட்டு சீக்கிரமே சென்னை சென்ட்ரலுக்கு சென்றுவிட்டதால் ஹிக்கின் போத்தம் புத்தகக் கடையில் துணையெழுத்து, ராஜாஜியின் ராமாயணம், காண்டேகரின் சிறுகதைகள், லா. சா. ராவின் கழுகு ஆகிய புத்தகங்களை வாங்கிக் கொண்டு காத்துக்கொண்டிருந்தான் கிருஷ்ணன். அரைமணி நேர காத்திருப்பிற்குப் பின் கனகராஜ் வந்திருந்தான்.

எப்படி இருக்கீங்க? என்ன சாப்பிடுறீங்க? என்று கேட்டபடியே கனகராஜை நெருங்கினான் கிருஷ்ணன்.

"எதுவும் வேணாம் சார். இருக்கறது கொஞ்ச நேரம் அதுல உங்க பயணத்தைப் பற்றி பேசலாமே...." என்றான் கனகராஜ்.

முதலில் சார் சார் என்று சொல்வதை நிறுத்துங்க...எனக்கு ஒரு மாதிரி இருக்குது. பயணத்தைப் பற்றி பேசறதுக்கு என்னப்பா இருக்கு! சரி, எதாச்சும் ஜூஸ் குடி... என்றபடியே பிளாட்பாரம் டிக்கெட் வாங்கிக் கொண்டு இருவரும் திருவனந்தபுரம் எக்ஸ்பிரஸ் நிற்கும் ஐந்தாவது பிளாட்பாரம் நோக்கி நடந்தார்கள். அங்கிருக்கும் பிளாட்பார இருக்கையில் அமர்ந்து மாதுளை ஜூஸை குடித்துக் கொண்டே பேச ஆயத்தமானார்கள்.

உலகில் உள்ள எல்லா இடங்களுமே புனிதமான இடங்கள் தான். நான் சென்ற இடங்கள் மட்டும் புனித இடங்கள் அல்ல. கிறித்துவர்களுக்கு வாடிகன், முஸ்லிம்களுக்கு மெக்கா, இந்துக்களுக்கு காசி, கயை, கைலாயம் என்று பிரிப்பதில் எனக்கு உடன்பாடில்லை. பிறகு நான் ஏன் செல்ல வேண்டுமென்றால் அந்த இடங்கள் அனைத்தும் வரலாற்று சிறப்பு மிக்க இடங்கள். நம் மூதாதையர்களால் கொண்டாடப்படும் சிறப்புமிக்க இடங்கள் .

நான் பிரயாகையில் முண்டம் அளிக்கவில்லை, கயையில் பிண்டம் அளிக்கவில்லை, காசியில் புனித நீராடவில்லை...நன் ஒரு பார்வையாளனாகவே அந்தப் பயணத்தில் செயல்பட்டேன். மொத்தப் பயணத்தில் எனக்கு மிகவும் மகிழ்ச்சி தந்த விஷயம் எவரஸ்ட் சிகரத்தைப் பார்த்ததும் போக்ராவில் காலாற நடந்ததும் தான் என்று விளக்கிக் கொண்டு இருந்தான் கிருஷ்ணன்.

உப்புசப்பு இல்லாத உப்புமாவை விருந்தாளிக்கு வைப்பது போல் தயக்கத்துடனே தனது அனுபவங்களை சொல்லிக்கொண்டு இருந்தான் கிருஷ்ணன். தீராத பசி கொண்ட தேவர்கள் அமுதத்தை கண்ணால் பார்த்தே பசியாருவதைப் போல கனகராஜும் ஒவ்வொரு வார்த்தையையும் தனது செவிகளில் வாங்கி தின்றுகொண்டிருந்தான்.

"எனக்குக் கூட புனித தளங்களுக்குச் செல்ல வேண்டுமென்று ஆசை, அதைப் பற்றி என்னுடைய நண்பர்களிடம் பேசினால் கேலி செய்கிறார்கள்" என்று கனகராஜ் கூறினான்.

நீங்க செய்யறது தப்பு கனகராஜ். உங்களுக்குப் பிடித்த விஷயம் அவங்களுக்கும் பிடிக்கணும் என்ற அவசியம் இல்லையே. சரி... நான்கு வருடங்களில் நான் கைலாயம் செல்லலாம் என்று இருக்கிறேன். கொஞ்சம் பணம் சேர்த்துக் கொள்ளுங்கள். போகும்போது உங்களிடம் தெரிவிக்கிறேன். முடிந்தால் என்னுடன் சேர்ந்து கொள்ளுங்கள்.

அண்ணா, எனக்கு மென்பொருள் துறையில் ஏதாவது சாதிக்க வேண்டுமென்று ஆசை. பிறகு குழந்தைகளுக்கு படிப்பு சொல்லிக் கொடுக்க வேண்டுமென்று ஆசை. சுற்றுப்புற சூழலுக்கு ஏதாவது நல்லது செய்யவேண்டுமென்று ஆசை. இந்த மாதிரி உங்களுக்கு என்ன செய்யனும்னு ஆசை?

உங்களுடைய ஆசைகள் நிறைவேற வாழ்த்துக்கள். பெருசா சாதிக்கணும்னு எதுவும் இல்லை. அப்படி எதாச்சும் செய்ய வேண்டுமென்றும் நினைத்ததில்லை.

சிறுவயதில் எழுத்தாளர் சுஜாதாவிற்கு ஏரோபிளேன் ஓட்ட வேண்டும், எஞ்சினியர் ஆகவேண்டும், கிடார் வாசிக்க வேண்டும்... என்று பல ஆசைகள் இருந்ததாம். பெருவாரியான ஆசைகளை நிறைவேற்றியும்விட்டார். ஆனால் காலையில் எழுந்து சிரமமில்லாமல் கக்கூஸ் போவதையே தனது வயோதிககால சந்தோஷமாகக் கூறுகிறார். பெரிய சாதனை, பெரிய சந்தோசம் என்பது நம்ம செய்யற சின்ன சின்ன விஷயங்களிலேயே நிறைய இருக்கு. அத அனுபவிச்சாலே போதுமே என்று கிருஷ்ணன் கூறினான்.

சரி... உனக்காக நான் எஸ். ரா எழுதிய துணையெழுத்து வாங்கி வந்திருக்கேன். நீ படிக்கனும்னு நான் சொல்லமாட்டேன். படித்தால் எனக்கு சந்தோஷமே. எனக்கும் சில புத்தகங்கள் வாங்கி இருக்கேன் பார்கிறாயா?

கொடுங்க அண்ணா...ஹை! இது என்ன ராமாயணம் என்று அவனுடைய முகம் முழுவதும் சந்தோஷக் கலை தாண்டவமாடியது.

அந்த ராமாயணம் ராஜாஜி எழுதியது கனகராஜ். நீங்க கவர்னரா இருந்து இருக்கீங்க, முதல்வரா இருந்து இருக்கீங்க, இன்னும் பல உயரிய பதவியில் இருந்து இருக்கீங்க.... உங்களோட வாழ்க்கையிலேயே நீங்கள் எதற்காக சந்தோஷப்பட்டீர்கள்? என்று அவரிடம் கேள்வி கேட்டிருக்கிறார்கள்.

ராமாயண மகாபாரத்தை எழுதிய போதுதான் நான் மிகவும் சந்தோஷமாக உணர்ந்தேன் என்று பதில் சொல்லியிருந்தாராம்.

ஆகவே சுவாரஸ்யமாய் இருக்கும். நீயே எடுத்துக்கோ. நான் வேற வாங்கிக்கிறேன் என்று அவனுக்கே கொடுத்துவிட்டான்.

அண்ணா, உங்களுக்கு இதெல்லாம் எப்படி அண்ணா தெரியுது?

நீ எதை கேக்குற கனகராஜ்.

இல்லங்க அண்ணா, அத எப்படி சொல்றதுன்னு தெரியல...

நான் ரொம்ப மந்தமானவன். எனக்கு எதுவும் தெரியாது...கனகராஜ் உங்க ரயில் புறப்படுது கலம்புங்க...கலம்புங்க... ரயிலின் நகர்வு இருவரையும் பிரித்தது இருந்தாலும் சிரித்துக் கொண்டே கையசைத்துக் கொண்டார்கள்.

ஐயோ... ரயில் போயிடுச்சே. கனக்கு...கனக்கு... உன்கூட ஒரு போட்டோ எடுக்கனும்னு நெனச்சேனே! கத்தியவனின் கோரிக்கையை ரயிலின் ஜிகு புகு சத்தம் நிதானமாக விழுங்கியது. அதற்கும் கனகராஜ் சிரித்துக் கொண்டே கையசைத்துக் கொண்டிருந்தான்.

Saturday, August 15, 2009

சுந்தர ராமசாமி - 'நீ யார்' ஆவணப்படம்

சுந்தர ராமசாமி... தன் படைப்புகள் மூலமும், காலச்சுவடு மாத இதழ் மற்றும் காலச்சுவடு பதிப்பகத்தின் மூலமும் தனக்கென ஒரு தனி இடத்தையும் பெரும் தாக்கத்தையும் நவீன தமிழ் இலக்கியத்தில் ஏற்படுத்தியவர் . இளம் படைப்பாளிகளின் ஆதர்ஷனங்களில் அவரும் முக்கியமானவர் என்றே கூற வேண்டும். அவரைப் பற்றிய "நீ யார்" என்ற ஆவணப்படத்தை அண்ணா சாலையிலுள்ள ஃபிலிம் சாம்பாரில் இன்று (16-08-2009) காலை 10 மணிக்கு ஒளிபரப்ப இருப்பதாக எழுத்தாளர் திரு: ஞானி அவர்களின் மூலம் தெரிய வந்தது.

சரியாக காலை 10.05-ற்கு அரங்கத்தினுள் சென்றேன். நிறைய கலைத் துறையை சேர்ந்தவர்கள் வெளியில் நின்றுகொண்டு இருந்தார்கள். அனைவரும் சந்தோஷமாக இருந்தார்கள். தனியாளாக சென்றதால் யாரிடம் பேசுவது என்று தயக்கமாக இருந்தது. ஒருவரிடம் இங்கு தானே சு. ரா-வைப் பற்றிய ஆவணப்படம் திரையிடுகிறார்கள் என்று கேட்டேன். அவரும் "ஆம்" என்றார்.

swine flue - பீதி காரணமாக முகம் மற்றும் கைகளை அலம்பிவிட்டு மீண்டும் அவரையே கடந்து சென்றேன். என்னை இடை மறித்து "நீங்கள் தானே கிருஷ்ண பிரபு?" என்று கேட்டார். ஆச்சர்யமாக இருந்தது. "என்னை எப்படி உங்களுக்குத் தெரியும்?" என்றேன். நீங்கள் எனக்கு பின்னூட்டம் அளித்துள்ளீர்கள். என் பெயர் விஷ்ணு குமார் என்று கூறினார்.

யாருமே துணைக்கு இல்லையே என்று நினைத்த எனக்கு இவரின் அறிமுகம் ஆறுதலாக இருந்தது. உங்களுடன் நான் அமர்ந்து கொள்வதில் பிரச்சனை இல்லையே என்று கேட்டவாறு அவருடன் அமர்ந்து கொண்டேன். சிறிது நேரத்தில் ரமணியின் வரவேற்புரையுடன் திரையிடல் ஆரம்பமானது.

"நம்மால் இயன்ற காரியங்களை உண்மையுடனும், பொது நலத்துடனும் செய்தால் உரிய காலத்தில் சில மாற்றங்களைக் காண முடியும். தமிழ் சமுதாயத்தில் எழுத்தாளர்கள் நல்ல சக்தியாக வர வேண்டும். அவர்கள் சுய மரியாதையுடன் இருக்க வேண்டும். அவர்களுக்கென்று மொழி, நடை, பார்வை, அவதானிப்பு உருவாக வேண்டும்.சுயத்தைக் காப்பாற்றும் சூழல் ஏற்பட வேண்டும். எந்த சமூகம் எழுத்தாளனைக் கொண்டாடுகிறதோ அந்த சமூகமே மதிப்பினைப் பெரும்" என்ற முழக்கங்களுடன் சுந்தர ராமசாமி திரையில் தோன்றினார்.

சு.ராவின் கவிதைகள், ‘ஜே.ஜே: சில குறிப்புகள்’ குறித்துப் பலரும் பகிர்ந்துகொண்ட கருத்துகள் அவரின் ஆளுமையை வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளன. நாகர்கோவில் கல்லூரி மாணவிகள் மற்றும் அமெரிக்கன் கல்லூரி மாணவர்களின் சு ராவின் படைப்புகள் மீதான விமர்சனம் ரசிக்கும்படியாக இருந்தது.

சுரா Sun TV, Asianet TV போன்ற தொலைக்காட்சிகளுக்கு அளித்த பேட்டிகளும், அவருடைய குறிப்பிட்ட மேடைப் பேச்சுகளும் இந்த ஆவணப் படத்தில் இடம்பெறுகின்றன.

நாராயணன், R.V. ரமணன், N.சுகுமாரன், அசோகமித்திரன், ஆற்றூர் ரவிவர்மா, சலபதி, தியோடார் பாஸ்கர், ஞானி, பாலுமகேந்திரா, விஷ்ணு மதூர், பால் சகரியா, ராஜ மார்த்தாண்டம், மனுஷபுத்திரன், கோகுலக் கண்ணன், அருணா சாய்ராம், புதுவை இளவேனில், யுவன் சந்திரசேகர் முதலானவர்கள் அவரது அனுபவங்கள், படைப்புகள் குறித்து வெளிப்படுத்திய கருத்துகள் ஆவணப் படத்திற்கு அழகு சேர்கின்றது.

"புதுவை இளவேனில்" - சுந்தர ராமசாமியை புகைப்படம் எடுத்தவர். புகைப் படம் எடுக்கும் போது அவருக்கு இருந்த மகிழ்ச்சியான மன நிலையையும், அவர் கொடுத்த ஒத்துழைப்பையும் அனுபவித்துப் பேசினார்.

"அருணா சாய்ராம்" - இவருடைய தீவிர விசிறியாம் சுந்தர ராமசாமி. குழந்தைகள் பெண்கள் ஆண்கள் என்ற நாவலை அவருக்கு அன்பளிப்பாக அளிக்க வேண்டும் என்று சொல்லிக்கொண்டு இருந்தாராம். அவருடைய அன்பு மனைவி கமலா அருணா சய்ராமிடம் சொல்லிக் கொண்டு இருந்தார்.

பள்ளி மாணவிகளுக்கு அவர் அளித்த பேட்டி வித்யாசமான சுந்தர ராமசாமியைப் பார்க்கும் படியாக இருந்தது. மாணவிகளுடைய கேள்விகளுக்கு அவர் அளித்த பதில்கள் ரசிக்கும்படியாக இருந்தது.

இரண்டாம் பாதியில் இடம்பெற்ற சு.ராவின் மரணமும், அவர் அமெரிக்காவிலிருந்து இந்தியாவிற்குக் கொண்டுவரப்பட்ட விதமும் மனதை உலுக்குவதாக இருந்தது. அதற்குப் பிறகு அவருடைய குடும்பத்தார் சுந்தர ராமசாமியின் பிறந்த இடம், வளர்ந்த இடம் என பல விஷயங்கள் விரிவாகக் காட்டப்படுகிறது. சு. ரா-வைப் பற்றிய அவருடைய இளைய பேரனின் நினைவுகள் அருமையிலும் அருமை. மழலைக்குரலில் மாறாத அன்புடன் அவன் பகிர்ந்துகொள்ளும் விதம் ரசிக்க வேண்டிய ஒன்று.

தனது மறைவிற்குப் பிறகு சடங்குகள் வேண்டாம் என்று சுந்தர ராமசாமி சொல்லிவிட்டாராம். ஆகவே அவர் விருப்பப்படி இறுதி மரியாதை செய்திருக்கிறார்கள். அசோகமித்திரன் அதைப் பற்றி தனது கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டார்.

ஆவணப்படம் போல் இல்லாமல் இயல்பாக படமாக்கியிருக்கும் விதம் அருமை. ஒளிப்பதிவு, எடிட்டிங், இயக்கம் அனைத்துமே அருமை. R.V ரமணணின் நீண்ட கால உழைப்பு இதில் இருக்கிறது.

தூர்தஷனுக்காக அரைமணி நேரம் எடுக்கப் பட்ட இந்த ஆவணப்படத்தின் தணிக்கை செய்யப் படாத இரண்டு மணி நேர [சந்திப்பில் ஒளிபரப்பப்பட்ட] குறுந்தகடு விலைக்கு வாங்கக் கிடைக்கிறது. இயக்குனர் R.V.ரமணணிடம் தொடர்பு கொண்டால் 'நீ யார்' குறுந்தகடை விலைக்கு வாங்கலாம்.

Details:
NEE YAAR – Who are you?

Duration: 120 minutes
Tamil, Malayalam, English (Subtitled in English)
Directed, Photographed and Edited by RV Ramani
Produced by Public Service Broadcasting Trust & Prasar Bharati

Address:
R.V. Ramani [Director & photojournalist]
L-1/3, First Floor,
28th Cross, Besant Nagar,
Chennai 600090. India

Website: www.ramanifilms.com
E-mail: ramanirv@hotmail.com

Monday, August 10, 2009

இலக்கியமும் சினிமாவும் - கேணி இலக்கிய சந்திப்பு

இயக்குநர் பாலு மகேந்திரா - கேணி இலக்கிய சந்திப்பு

அழகிரிசாமி சாலையில் அரைமணி நேரம் அலைந்து திரு:ஞானியின் வீட்டைக் கண்டுபிடித்தேன். 4.10 மணிக்கு சந்திப்பு நடக்கும் இடத்திற்குச் சென்றேன். சரியாக மாலை 4.30 மணிக்கு திரு: பாலு மகேந்திரா ஞானியின் வீட்டிற்கு வந்தார். 10 நிமிட உரையாடலுக்குப் பிறகு 4.40- ற்கு கூட்டம் நடக்க இருக்கும் இடத்திற்கு ஞானி அவர்கள் திரு:பாலுமகேந்திராவை அழைத்துக் கொண்டு வந்து வாழ்த்துரையோடு 'இலக்கியத்திற்கும் சினிமாவிற்குமான தொடர்பு' என்ற தலைப்பில் உரையாட இருக்கிறோம் என்று அறிமுகப்படுத்தினார். மேலும் கேள்வி நேரத்தின் போது தேவையில்லாத கேள்விகளைக் கேட்க வேண்டாம் என்று கேட்டுக் கொண்டார்.

திரு: பாலுமகேந்திரா வந்தவுடன் அனைவரும் எழுந்து நின்று மரியாதைச் செலுத்தினோம். Please sit, Please sit என்று அனைவரையும் பார்த்து புன்னகையுடன் "இந்த சந்திப்பு கிணற்றடியில் நடப்பதால் மகிழ்ச்சியுடன் வருவதற்குச் சம்மதித்தேன்" என்று கூறினார்.

மேலும் இந்த கம்பீரமான சூழலில் கலந்துரையாட வந்திருப்பது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. அடிப்படையில் நான் இலக்கிய உபாசகன். கவிதை, கட்டுரை, சிறுகதை மற்றும் நாவல்கள் ஆகிய இலக்கியம் சார்ந்த படைப்புகள் சினிமாவிற்கு வருவதற்கு முன்பே என்னை ஆக்ரமித்த விஷயங்கள். அந்த வகையில் சினிமா என்னுடைய இரண்டாவது காதலி. தீவிர வாசகனாக இருந்ததால், இருப்பதால் 'இலக்கியத்திற்கும் சினிமாவிற்குமான தொடர்பு' எனற கலந்துரையாடல் எனக்கு உடன்பாடான தலைப்பே. மேலும் நான் அதிகம் பேச விரும்புவதும் கூட.

என்னிடம் உதவியாளராக சேர ஒரு சிலர் விரும்புகிறார்கள். அப்படி வருபவர்களிடம் நான் கேட்கும் முதல் கேள்வி "நீங்கள் கடைசியாக வாசித்த புத்தகம் என்ன?" என்பதுதான். அது சிறுகதையோ! நாவலோ! எதுவாக இருப்பினும் அதில் "உங்களை பாதித்த விஷயம் என்ன?" என்று கேட்பேன்.வாசிக்கும் பழக்கம் இல்லையெனில் அவர்களை உடனே அனுப்பி விடுவேன்.

ஆனால், சிலரிடம் ஒரு பொறி இருக்கும் அவர்களிடம் சில புத்தகங்களைக் கொடுத்து படித்துவிட்டு வருமாறு கூறுவேன். அதன் பின் அவரைப் பற்றி முடிவு செய்வேன்.அப்படிப்பட்ட சிலர், நான் வாசிக்கப் பழக்கப் படுத்திய நபர்கள் என்னையே மிஞ்சும் அளவிற்குப் படித்துவிட்டு, "இந்தப் புத்தகத்தை நீங்கள் படித்துவிட்டீர்களா?" என்று எனக்குப் பரிந்துரை செய்வார்கள். அந்தத் தருணங்களில் எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும்.

நான்கு வருடங்களுக்கு முன்பு இருதய வலியால் நான் சாக வேண்டியது. உறவுகளால் பிழைத்தேன். பிழைத்ததால் இங்கு இருக்கிறேன். இல்லையேல் பாலு மகேந்திராவுடனான இந்தச் சந்திப்பு சாத்யமில்லை. ஆகவே இருக்கும் காலத்தில் நான் கற்றுக் கொண்டதை என்னுடைய பள்ளியில் உள்ள மாணவர்களுக்கு வழங்கிவிட்டுப் போக ஆசைப்படுகிறேன்.

1999 -ல் (Nearly 10 years back), சன் தொலைக்காட்சி நிறுவனத்திடமிருந்து 52 வாரங்களுக்கான நெடுந்தொடர் (TV Episode) எடுக்க வேண்டி அழைப்பு வந்திருந்தது. "என்ன செய்யலாம்?" என்று யோசிக்கும் போது, மூத்த படைப்பாளிகளின் சிறந்த சிறுகதைகளை Short Pictures மாதிரி தரலாம் என்று முடிவு செய்தேன். அதற்காக பதின் பருவத்திலிருந்து நான் வாசித்த சிறந்த கதைகளை மீள் வாசிப்பு செய்தேன்.

மீள் வாசிப்பு ஒரு அலாதியான அனுபவம். ஆரம்ப காலங்களில் நான் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய படைப்புகள்... மீள் வாசிப்பில் சுவாரஸ்யம் இல்லாமல் போனது. சுமார்ரகம் என்று நான் நினைத்தப் பல படைப்புகள் சிறந்த படைப்புகளாகத் தெரிந்தன.

பொதுவாக ஒரு தப்பான அபிப்ராயம் இருக்கிறது, எழுத்தாளர்களுக்குக் கூட அது இருக்கிறது. அது என்னவெனில் எழுதும் அனைத்தையுமே சினிமாவாக எடுத்துவிடலாம் என்பது. இது மிகவும் தப்பான ஒரு அபிப்ராயம்.

"நீங்கள் சுமாரான கதையை எடுத்துக் கொண்டு அதை நன்றாக எடுத்துவிடுகிறீர்கள். ஆனால் சிறந்த கதைகளை நீங்கள் ஏன் படமாக்குவதில்லை" என்று என்னிடம் சிலர் குறைபட்டுக் கொள்கிறார்கள் அல்லது நட்புடன் கேட்கிறார்கள். அதற்கு நான் பல இடங்களில் பதில் சொல்லி இருக்கிறேன்.

உதாரணமாக, சுஜாதா ஒரு கதை இப்படி ஆரம்பிப்பதாக எடுத்துக் கொள்ளலாம்,

"ஒரு கிராமத்தில் ஒரு சிறுமி இருந்தாள். ஊரில் உள்ளவர்கள் வீட்டிலிருந்து அவளுடைய வீடு ஊரைவிட்டு சற்றுத் தள்ளி இருந்தது. அவள் அம்மா அவளைத் திட்டியதால் வீட்டிற்குப் பின்னால் சென்று தலையைத் தொங்கப் போட்டுக் கொண்டு உட்கார்ந்து கொண்டாள்..." - இதில் எதை நான் படமாக்குவது...

சுஜாதா மட்டுமல்ல லா. சா. ரா, சு. ரா, கரிச்சான் குஞ்சு, ஜெயகாந்தன்... இன்னும்... இன்னும் நிறைய எழுத்தாளர்களுடைய படைப்புகளை வாசித்திருக்கிறேன். அனுபவித்திருக்கிறேன், பெரிய வணக்கத்துடன் கூடிய மரியாதை செய்து அந்த சிறந்த கதைகளை ஒதுக்கி வைத்திருக்கிறேன். அவற்றை சினிமா எடுக்க இயலாது.

இங்கு எழுத்து என்பது ஒரு ஊடகம்(Media), சினிமா என்பது ஒரு ஊடகம்(Media), இரண்டுமே தொடர்பு சாதனங்கள். ஒரு ஊடகத்திலிருந்து மற்றொரு ஊடகத்திற்குப் போகும்போது சில விஷங்களை கவனிக்க வேண்டும். அவற்றில் சாதகமான விஷயங்கள், சாதகமில்லாத விஷயங்கள் இரண்டையும் அலச வேண்டும். அப்படி சாத்திய அசாத்தியங்களைப் புரிந்து கொண்டாள் தான் நல்ல படைப்பு கிடைக்கும்.

இந்த இடத்தில், "படைப்பிற்கு முக்கியமான இரண்டு விஷயங்கள் என்ன?" என்று அனைவரையும் பார்த்து ஒரு கேள்வி கேட்டார்.

Culture, Feeling, Subject, Concept - என்று பலவாறு பதில் சொன்னோம். சரியான பதில் வரும் வரை எங்களை விடவில்லை. வந்திருந்த ஒருவர் Form & Content(Subject) என்ற சரியான பதிலைச் சொன்னார்.

Exactly...அந்த இரண்டும் தான் முக்கியம் என்று அவரைப் பாராட்டினார். உருவம் (Form) மற்றும் உள்ளீடு (Content) இந்த இரண்டும் தான் படைப்பிற்கு முக்கியம்.

ஏசுநாதரின் ஓவியத்தை எடுத்துக் கொள்வோம். இதற்கு முன் எத்தனையோ ஓவியர்கள் வரைந்திருக்கிறார்கள். மறுபடியும் வரைய என்ன இருக்கிறது என்று ஒரு படைப்பாளி நினைக்க முடியுமா?. இந்த இடத்தில் உள்ளீடு என்பது ஏசுநாதர். ஆனால் இங்கு ஓவியரின் திறமை அவர் உபயோகிக்கும் வண்ணத்தில் மற்ற படைப்பாளிகளிடமிருந்து வேறுபடுத்திக் காட்ட வேண்டும். Brush Strokes வித்யாசமாக இருக்க வேண்டும். இங்கு Subject-ஐ விட Form தான் படைப்பினை முன்னிறுத்துகிறது.உன்னதமாக்குகிறது.

இந்த Subject & Form இரண்டும் பின்னிப்பிணைந்து அட்டகாசமான ஒரு வெளிப்பாடு இருக்கும் போது உன்னதமான படைப்பாக வெளிப்படுகிறது.

உதாரணமாக, பாட்டி கக்கா கதையை எடுத்துக் கொள்வோம்.

எத்தனை ஆயிரம் முறை கேட்டக் கதை. எத்தனை பாட்டிகள் எத்தனை குழந்தைகளுக்கு சொன்னது. இன்னும் எத்தனைக் கோடி பாட்டிகள், எத்தனைக் கோடி குழந்தைகளுக்கு சொல்லப் போவது... What a marvelous and beautiful story. இந்தக் கதையை சினிமாவாக எடுத்தால், முக்கியப் பாத்திரம் என்ன? (பாட்டி)... எங்கு நடக்கிறது? (கிராமத்திலா வேறு எங்காவதா?)... இதனுடைய உள்ளர்த்தம் என்ன? இப்படி அலச வேண்டி இருக்கிறது. அதற்கான Sequence தேர்ந்தெடுக்க வேண்டும்.

இங்கு முக்கியமாக கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயம் என்னவெனில், ஒரு படைப்பாளியை மதிப்பிட அவனுடைய மிகச்சிறந்த படைப்பை எடுத்துக் கொண்டு மதிப்பிட வேண்டும். ஏனெனில் ஒவ்வொரு படைப்பும் உன்னதமான படைப்பாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை. உன்னதத்தை நிர்ணயிக்கும் காரணிகள் நிறைய இருக்கிறது. அவற்றிக்கு சில நேரங்களில் படைப்பாளி பலியாக நேரிடும். அந்தக் காரணிகளைப் பேச நான் விரும்பவில்லை.

ஆனால் சிறுகதையை படமாக்கும் போது... இங்குதான் ஒரு சிக்கல் வருகிறது.

ஒரு பெண் அவரைப் Photo எடுக்கும் போது Flash அவரை நனைத்தது. உடனே, தயவு செய்து Photo எடுக்காதீங்க. As a Camera Man... It will disturb me... எங்க விட்டேன்...சில நேரங்களில் நூலறுந்த பட்டம் போல எங்கோ சென்று விடுவேன்...என்று சொல்லிக் கொண்டு இருக்கும் போது திரு: ஞானி அவர்கள் எடுத்துக் கொடுக்க மீண்டும் தொடர்ந்தார்.(சிறுகதையைப் படமாக்கும் போது ஏற்படும் சிக்கல்...)

பாருங்க, ஒரு சிறுபெண் வெட்கம் வரும் போது பாவாடையை எடுத்து முகத்தை மறைத்துக் கொள்கிறாள். அவளுக்கு தெரிந்து முகத்தில் தான் உள்ளது வெட்கம். இப்பொழுது அவளே பெரியவள் ஆகிறாள்...இப்பொழுது அவளுக்கு வெட்கம் வருகிறது, முகத்தை அதேபோல் மறைக்க முடியுமா? இப்பொழுது அவளுக்கு வெட்கம் வேறு இடத்தில் இருக்கிறது. (எல்லோரும் சிரிக்கிறார்கள்). இதுதான் ஊடக மாற்றத்தில் உள்ள சிரமம்.

நீங்கள் எந்த மொழியை வேண்டுமானாலும் பேசுங்கள். நான் என்னுடைய மொழியில் பேசுகிறேன். என்னுடைய மொழி சினிமா.ஒரு மொழியிலுள்ள கதையை என்னுடைய மொழிக்கு கொண்டுவரும் போது சிரமங்கள் தவிர்க்க முடியாதது.அதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

உதாரணமாக, ஒரு பெண் ஒரு ஆணிடம் காதலைதத் தெரியப்படுத்துகிறாள். அவனுக்கும் விருப்பம். ஆனால் அந்தப் பெண் ஒரு முறையிடுகிறாள். உன்னை மணந்து கொள்ள வேண்டுமெனில் "உன்னுடைய குஞ்சை அறுத்துப் போடு" என்கிறாள் (எல்லோரும் சிரிக்கிறார்கள்). எது ஆண்மையின் அடையாளமோ அதையே அறுத்துவிட்டு பெண்ணிடம் என்ன செய்ய... இந்தச் சிரமம் தான் சிறுகதையை சினிமாவாக எடுக்கும் போது ஏற்படுகிறது..

Here language is extremely limited.Some times we are searching for a right words. But we can't. For Ex:

நண்பருடைய தாயார் இறந்து விடுகிறார்கள். உங்களுக்கு நிறைய முறை உணவைப் பரிமாறியவர். பெற்ற பிள்ளைக்கு சமமாக உங்களையும் நடத்தியவர். இழவு வீட்டிற்குச் செல்கிறீர்கள். அந்த சோகத்தில் இருக்கும் நண்பரிடம் நீங்கள் என்ன மொழியை பேசுவீர்கள். அவரை ஆற்றுதல் படுத்த உங்களிடம் மொழியோ அல்லது வார்த்தையோ இருக்கிறதா? ஒரு தழுவலைத் தவிர.அந்தத் தழுவல் ஆயிரமாயிரம் வார்த்தைகளுக்குச் சமம் மொழி உதிரும் இடம் இங்கு தான்.

இது போல் பல விஷயங்களைச் சொல்லலாம். நான் சின்னத் திரைக்காக எடுத்த கதைகளில் மாலனின் கதையும் ஒன்று. 'தப்புக் கணக்கு' என்ற சிறுகதை. மாலனின் மிகப் பெரிய விசிறி என்று சொல்லி அவருடைய எளிமை, நேர்மை, அறிவு என பல விஷயங்களைப் புகழ்ந்தார்.

மாலனின் சிறுகதை புத்தகத்தைக் கையேடு கொண்டுவந்திருந்தார். திரு ஞானி அவர்களை அந்தக் கதையைப் படிக்கச் சொன்னார். அவர் படிக்கும் போது அனைவரையும் கண்களை மூடிக் கொண்டு கதையை கேட்கச் சொன்னார். அந்த 7 பக்க கதையை படித்து முடித்ததும் அதை Script-டாக மாற்றுவதில் உள்ள சிரமத்தையும் சிரத்தையையும் எடுத்துச் சொன்னார். 7 பக்கக் கதையை 1 பக்க Script-டாக மாற்றி இருந்தார்.இங்கு திரைத் துறையில் இருந்து வந்திருந்தவர்களுக்கு முக்கியமான பல ஆலோசனைகள் வழங்கினார். அவர்களுக்கு உபயோகமாக இருந்திருக்கும்.

சுவாரஸ்யமாக பேசிக்கொண்டே போகிறார். நேரம் 7 மணியைத் தாண்டிச்செல்கிறது. அதை ஞாபகப் படுத்தவும். மாலனுடைய சிறுகதையை டிவி- ல் ஒளிபரப்பினார்கள்.T.V Color & Contrast setting -ல் பிடிவாதமாக இருந்தார். Settings சரியாக இருக்கிறதா என்று உறுதி செய்து கொண்டப் பின்னர் தான் படத்தை திரையிட அனுமதித்தார்.நீங்கள் கடையில் வாங்கும் போது இருக்கும் அதே Setting-ஐ Use பண்றீங்க. அது தப்பு. Setting சரியாக இருக்கிறதா என்று பாருங்கள். பிறகு டிவி பாருங்கள் என்று பரிந்துரை செய்தார்.

படம் ஓடி முடிந்தது அனைவரும் கைதட்டினார்கள். இறுதியாக ஒன்று சொல்கிறேன். தமிழ் சினிமாவில் இறந்துகொண்டு வரும் ஒரு துறை Script Writing. எனவே நான் பேசிய இவ்வளவு மணி நேரத்தில் என்னுடைய உரையைக் கேட்டு யாரேனும் ஒரு நல்ல Script Writer பின்னாளில் வந்தால் மிகவும் மகிழ்வேன். சென்னையில் சினிமாவைப் பற்றி திறந்த மனதுடன் பேச முடியவில்லை. கேணி சந்திப்பு அந்தக் குறையை போக்கியது. நன்றி...என்று கூறி உரையை முடித்தார்.

இறுதியாக எழுத்தாளர் பாஸ்கர் சக்தி நன்றியுரை கூறி கேணி சந்திப்பை நிறைவு செய்தார்.

இதே சந்திப்பைப் பற்றிய இதர பதிவுகள்:

மூன்றாவது கிணறு! - ரவிபிரகாஷ்
கேணி - இலக்கியமும் சினிமாவும்...
இலக்கியமும் சினிமாவும் - பாலு மகேந்திரா உரை

குறிப்பு: அங்கு நடந்த 3 மணிநேர உரையாடலின் சிறு குறிப்பு தான் இது. என்னோட மருமகங்களுக்கு சினிமா Interest அதிகம். அவங்க சிதம்பரம் சென்றுள்ளதால் அவர்களுக்காக நான் சென்றேன். நான் அதிர்ஷ்டசாலி ஏனெனில் பாலு மகேந்திராவின் நீண்ட உரையைக் கேட்க முடிந்தது.